தொடர்ந்து விலை உயரும் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் - முதலமைச்சர் ஆலோசனை..!
காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமைச் செலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேளாண்மைதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் தக்காளி,சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவைப்பட்டாால், தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல்களை மேற்கொள்ளலாம்.
தமிழ்நாடு முழுவதும் உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் செயல்பட்டது போல, நடமாடும் காய்கறி கடைகளை மாநகராட்சி மற்றும் தோட்டக்கலை மூலமாக தொடங்கலாம்.
அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.