தகுதியுள்ள ஒருவரும் விடுபட்டு விட கூடாது - முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
தகுதியுள்ள ஒருவரும் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு விட கூடாது என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணி
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கான(SIR) அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நவம்பர் 2 ஆம் திகதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில், 2026 தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் ஆணையம் SIR-ஐ நடத்த வேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இதனை கண்டித்து வரும் நவம்பர் 11 ஆம் திகதி, திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.
இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக மாவட்ட செயலாளர்களுடன் SIR தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏக்களும், தொகுதி பார்வையாளர்களும் பங்குபெற்றுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
இதில் பேசிய மு.க.ஸ்டாலின், "SIR பணிகளில் தகுதியான வாக்காளர் ஒருவர் பெயர் கூட விடுபட்டுவிடக் கூடாது. அதே போல தகுதி இல்லாத வாக்காளர் பெயர்களும் பட்டியலில் இடம் பெறக்கூடாது.

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என பல்வேறு திட்டமிடல்களை பாஜக செய்து வருகிறது ED, IT மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்து நிறுவனங்களையும் நமக்கு எதிராக பயன்படுத்த தயாராகிக் கொண்டு வருகிறார்கள். யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம், களம் நம்முடையதுதான்.
நான் விசாரித்த வரையில் பொதுமக்களிடம் SIR குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் BLOக்கள் எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே புரியவில்லை என சொல்கிறார்கள்" என கூறியுள்ளார்.