நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக சிறந்து விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டாளின் அவதார நாளான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சியாக நடைபெறும்.
அதுபோல இந்த ஆண்டும் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ளதால் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிது. இம்மாதம் 7-ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.நாளை புதன்கிழமை அன்று திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது.
அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நாளை விருதுநகர் மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இம்மாதம் 3வது சனிக்கிழமையான 17-ம் தேதியன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.