பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியரே செய்த கொடூரம்
பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு பள்ளி
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பி.எஸ்.கே. பூங்கா தெருவைச் சேர்ந்த ராஜேஷ்(40) என்பவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையின் போது பள்ளி மைதானத்துக்கு விளையாடுவதற்காக மாணவர்கள் வந்துள்ளனர். அப்போது தேர்வுத்தாள் திருத்தும் பணிக்காக தலைமை ஆசிரியர் ராஜேஷும் பள்ளிக்கு வந்துள்ளார்.
பாலியல் தொல்லை
அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலர் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் அளித்தார்.
அதனடிப்படையில், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்திய போது தலைமை ஆசிரியர் ராஜேஷ் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் ராஜேஷ் மீது புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். அதன்பிறகு ஸ்ரீவில்லிபுத்தூறில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.