முதல்வர் குறித்தே அவதூறு கருத்து - வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்!! சிக்கலில் நடிகை ஸ்ரீரெட்டி
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர அரசியல்
ஆந்திர மாநிலத்தில் , நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அதன் கூட்டணி கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
இதையடுத்து ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். துணை முதலமைச்சராக பவன் கல்யாண் பதவியேற்று கொண்டார். அதே போல, சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான அமைச்சரவையில் அவரின் மகன் நாரா லோகேஷ் ஐடி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, தொழில்துறை அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.
வழக்குப்பதிவு
இந்த சூழலில் தெலுங்கு , தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக கூறி தெலுங்கு, தமிழ் இயக்குனர்கள், நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் அளித்து நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை கிளப்பினார்.
அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கு சில நடிகர் நடிகைகளை குறித்து ஸ்ரீரெட்டி அளிக்கும் பேட்டிகள் கருத்துகள் சர்ச்சையை கிளப்பும். அந்த வகையில் தான் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள் நாரா லோகேஷ், உள்துறை அமைச்சர் அனிதா ஆகியோர் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி பேசியுள்ளது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் பிற்படுத்தப்பட்ட பிரிவின் நிர்வாகி ராஜூ யாதவ் சார்பில் நடிகை ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்ரீரெட்டி மீது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.