சிசிடிவி காட்சிகளை இதுவரை காட்டவில்லை - ஸ்ரீமதி தாயார் குற்றச்சாட்டு!
மாணவி ஸ்ரீமதியின் தாயார் பள்ளி நிர்வாகம் இதுவரை சிசிடிவி காட்சிகளை காட்டவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீமதி மரணம்
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டையே அணுக வேண்டும் என உத்தரவிட்டது.

ஸ்ரீமதியின் பெற்றோர் மீண்டும் ஐகோர்ட்டை அணுகிய பொழுது இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் இரண்டு பிரேத பரிசோதனைகளின் போதும் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
முதலமைச்சரிடம் மனு
இந்நிலையில் ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு அறிக்கை முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தொடர்ந்து நேற்று பள்ளி தாளாளர் உள்பட ஐந்து பேருக்கு சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்கள் சந்தித்து, எங்கள் மகள் மரண விவகாரத்தில் நீதி வேண்டும், வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
தாயார் குற்றச்சாட்டு
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீமதியின் தாய், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். அவரை முழுமையாக நம்புகிறோம்.
சிபிசிஐடி விசாரணையை விரைவாக நடத்த வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வாங்கி தருவேன். மேலும் பள்ளி நிர்வாகம் இதுவரை சிசிடிவி காட்சிகளை காட்டக்கூடிய சூழல் இருந்தும் காட்டவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.