ஸ்ரீமதியின் தந்தை யார்? நடத்தை குறித்த அவதூறு - டிஜிபியிடம் தாயார் புகார்!
அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவதாக யூடியூப் செனல் மீது ஸ்ரீமதியின் தாயார் புகார் அளித்துள்ளார்.
ஸ்ரீமதி மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி ஜூலை மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் மாணவி ஸ்ரீமதியின் தயார் செல்வி தனது கணவருடன் சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த செல்வி கூறியவதாவது,
அவதூறு கருத்து
"ஸ்ரீமதியின் மரணம் திட்டமிட்ட கொலை. அதனை பள்ளி நிர்வாகம் மறைக்க முயற்சி செய்கிறது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடத்து வரும் அதேவேளையில் எனது மகள் மற்றும் குடும்பத்தினர் குறித்து யூடியூப் சேனலில் அவதூறு கருத்துக்களை பேசி வருகின்றனர்.
பள்ளி நிர்வாகத்தின் தூண்டுதல் பெயரில் இந்த அவதூறு கருத்துக்களை பதிவிடுகிறாரோ என்ற சந்தேகம் உள்ளது. ஸ்ரீமதியின் தந்தை யார்? அவரது இனிஷியல் ஜி-யா? இல்லை ஆரா? என்றெல்லாம் பேசுகிறார். எனது மகள் நடத்தையை மட்டுமின்றி என் நடத்தை குறித்தே அவதூறாக பேசுவது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
பின்னணியில் யார்?
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் அப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. யார் பின்னணியில் உள்ளது? எனக்கும் எனது கணவர் ராமலிங்கம் அவர்களுக்கும் 2005-ல் திருமணம் நடந்தது என்று கூறி அதற்கான ஆதாரமாக திருமண அழைப்பிதழ்,
பின்னர் ஸ்ரீமதியின் காதணி விழா அழைப்பிதழ், ஸ்ரீமதியின் ஆதார், பிறப்புச் சான்று உள்ளிட்டவற்றை எல்லாம் ஆதாரமாக காண்பித்தார். மேலும், பள்ளி சுவரில் இருந்த ரத்தக்கறை குறித்து நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
நான் அந்த பள்ளிக்கு பலமுறை சென்றுள்ளேன் அப்போதெல்லாம் அந்தக்கறை அங்கு இல்லை என்பதை என்னால் ஆணித்தரமாக நிரூபிக்க முடியும் என்றார். சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.