இலங்கை அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம் - வரலாற்றில் முதல் முறையாக 2 ஆம் வாக்கு எண்ணிக்கை
இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இலங்கை அதிபர் தேர்தல்
இலங்கையில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நேற்று(21.09.2024) நடைபெற்றது. மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சஜித் பிரேமதாச, அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கே, அநுர குமார திஸாநாயக்க ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது.
2022 ஆம் ஆண்டு பொருளாதார சிக்கலுக்கு பின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடையும் போது 75% வாக்குகள் பதிவானது.
விருப்ப வாக்குகள்
இதனையடுத்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதில் ஆரம்பம் முதலே அநுர குமார திஸாநாயக்க முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க 39.65% வாக்குகள் கிடைத்துள்ளது
இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசவுக்கு 34.09% வாக்குகளும், மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 17.47% வாக்குகளும் பதிவாகியுள்ளது. எந்த வேட்பாளரும் 50% வாக்குகள் பெறாத நிலையில் விருப்ப வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது.
அநுர குமார திஸாநாயக்க
இதுவரை இலங்கையில் நடைபெற்ற 8 அதிபர் தேர்தல்களிலும் வெற்றிபெறும் வேட்பாளர் 50% க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று வந்துள்ளனர். இதனால் விருப்ப வாக்குகளை எண்ணும் சூழல் அமையவில்லை.
இந்நிலையில் தற்போதைய தேர்தலில் யாரும் 50% வாக்குகள் பெறாத நிலையில் அதிக வாக்குகளை முதல் 3 வேட்பாளர்களின் விருப்ப வாக்குகளை எண்ணப்படுகிறது. விருப்ப வாக்குகளின் எண்ணிக்கையிலும் அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) முன்னிலை வகித்து வருவதால் அவரே அதிபராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே 2.52% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். தமிழ் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட அரியநேந்திரன் 1.92% வாக்குகள் பெற்று 5வது இடத்தில் உள்ளார்.