இலங்கையை மிரட்டும் கனமழை - கடந்த 2 நாட்களில் 2.30 லட்சம் பேர்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் பெய்த கனமழையால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை
வங்காள விரிகுடாவில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இலங்கையில் கடந்த 2 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஊவா மாகாணத்தின் பாதுளாவில் மலையையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.மேலும் 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியிலிருந்து 3 ஆயிரம் பேர் பாதுகாப்பிற்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் ஆறு மாணவர்கள், பள்ளி முடிந்து டிராக்டரில் தங்கள் வீட்டிற்குத் திரும்பினர். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக, அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டிராக்டர் சிக்கியது.இதில், 2 மாணவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, உயிரிழந்தனர்.
கனமழை
தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவம் மற்றும் கடற்படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுதும் மழை வெள்ளத்தால் இதுவரை 2.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 10,000க்கும் மேற்பட்டோர் 100க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.