மக்களவையில் கேள்வி எழுப்பிய திருமாவளவன்..பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர்!
மக்களவையில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது மைக் அணைக்கப்பட்டதால் அதிருப்தி ஏற்பட்டது.
திருமாவளவன்
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் அகற்றம் குறித்து கேள்வி எழுப்பியபோது மைக் அணைக்கப்பட்டது. அதோடு, 18வது மக்களவையின் தலைவராக பாஜகவைச் சேர்ந்த ஓம் பிர்லா வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி- தொல்.திருமாவளவன் மீண்டும் சபாநாயகராக பொறுப்பேற்ற ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “தங்கள் (சபாநாயகர்) இருக்கையின் வலது பக்கத்தில் செங்கோல் இருக்கிறது. செங்கோல் என்பது யார் பக்கமும் சாயக் கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கான,
நீதித் தவறாமையின் அடையாளமாகும். இந்த இருக்கையின் அழகே நீதித் தவறாமைதான். கடந்த காலங்களில் நீங்கள் சிறப்பான ஒரு அவைத் தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். ஆனால், ஆளும் கட்சிக்கு ஒரு சார்பாகவும், எதிர்க்கட்சிக்கு ஒரு வகையாகவும் அணுகியிருக்கிறீர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
மைக் ஆஃப்
எனவே, ஆளும் கட்சிக்கு சார்பாக இருக்கக் கூடாது என்பதைத் தான் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கையாக வைத்திருக்கின்றனர். கடந்த முறை பல்வேறு பண மசோதாக்களை ஆளும் கட்சி அறிமுகப்படுத்தியது. எது பண மசோதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உங்களுக்கு மட்டுமே உள்ளது.
அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஆளும் கட்சி மீண்டும் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடலாம். அதற்கு நீங்கள் வளையக் கூடாது என்பதை வேண்டுகோளாக வைத்து. மக்களவை தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த அம்பேத்கர், காந்தியடிகள்,
ஜோதிபா பூலே போன்ற மாபெரும் தலைவர்களின் சிலைகளை ஓரமாக கொண்டுபோய்....” இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே அவரது மைக் அணைக்கப்பட்டு, அடுத்து பேச வேண்டிய உறுப்பினர் பெயரை சபாநாயகர் கூறினார். இதன் காரணமாக மக்களவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.