ஆளுநர் உரையை நேரலை செய்ய அனுமதிக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்
ஆளுநர் உரையை நேரலை செய்ய டிடி பொதிகையை அனுமதிக்காதது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார்.
ஆளுநர் வெளிநடப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம்.
ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார். தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதால் ஆளுநர் வெளிநடப்பு செய்ததாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
சபாநாயகர் அப்பாவு
இந்த நிலையில், இன்று (08-01-25) ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின்போது டிடி பொதிகை டிவி மூலம் வெட்டி ஒட்ட முயற்சி நடந்தது.
ஆளுநர் பேசுவதை எடுத்து வெட்டி, ஒட்டி வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது தெரியவந்தது. ஆதனால் இந்த முறை அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 3 நிமிடங்கள் ஆளுநர் அவையில் இருந்தார். அதன் பின் ஆளுநர் வெளியேறிவிட்டார்.
நேரலைக்கு நெருக்கடி
பொதிகைக்கு நேரலை கொடுக்க ஆளுநர் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது. பொதிகை மூலம் நினைத்ததை நடத்த முடியவில்லை என்பதால் ஆளுநர் பதிவிட்டிருக்கிறார். ஆளுநர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது மக்கள் மற்றும் பேரவை உறுப்பினர்களை அவமானப்படுத்தும் செயல். ஆளுநரின் இந்த செயலை தமிழ்நாடு சட்டப்பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை வாசிப்பதுதான் ஆளுநரின் கடமை. ஆளுநர் சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர கோரிக்க வைக்க முடியாது. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க ஆளுநருக்கு உரிமை இல்லை" என பேசினார்.