அதிமுகவை பாஜக முந்திவிட்டதா..? எஸ்.பி.வேலுமணியின் கட்டமான பதில்
வெளியான கருத்துக்கணிப்புகளில் வாக்கு சதவீதத்தில் தமிழ்நாட்டில் பாஜக அதிமுகவை முந்திவிட்டது என தெரிவிக்கப்பட்டதற்கு எஸ்.பி.வேலுமணி பதிலளித்துள்ளார்.
கருத்து திணிப்பு
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கிய தலைவருமான எஸ்.பி.வேலுமணி, கருத்து கணிப்புகள் அல்ல, கருத்து திணிப்பு செய்கிறார்கள் என்று சுட்டிக்காட்டி, அதிமுக தான் தமிழ்நாட்டில் பெரிய இயக்கம் என்றும் திமுக எந்த திட்டமும் தரவில்லை என குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு முழுவதும் ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவில் பெரிய கட்சியாக, உலகத்தில் ஏழாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, அதிமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றார்.
பொய் பரப்புகிறார்கள்
அதிமுக ஐடி விங் சரியான தகவல்களை போடுவார்கள், ஆபாசமாக பதிவிட மாட்டார்கள் என்றும் பொய்யான தகவல்களை பரப்ப மாட்டார்கள் மற்றவர்கள் பரப்பும் பொய் பரப்புரைகளுக்கு பதிலடி தரும் வகையில் அதிமுக ஐடி விங் செயல்பாடுகள் கண்டிப்பாக இருக்கும் என உறுதிபட தெரிவித்தார்.
தனியார் செய்தி ஊடகத்தில் வெளியான கருத்துக்கணிப்பில், மக்களவை தேர்தலில், திமுக 38.33 %, அதிமுக 17.26 % மற்றும் பாஜக 18.48 % வாக்குகளை பெரும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.