40 வயதாகியும் திருணமாகாத விரக்தி - பெற்றோருக்கு ஸ்கெட்ச் போட்ட இளைஞர்!
தனது பெற்றோருக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்து இளைஞர் ஒருவர் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபரித முடிவு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் மல்லித்தெருவை சேர்ந்தவர் விமல் (40). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் விமல் 40 வயதாகியும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விபரீத முடிவெடுத்த அவர், தனது தாய், தந்தைக்கு குளிர்பானத்தில் திராவகத்தை கலந்து கொடுத்தார். இதனை குடித்து அவர்கள் மயங்கி விழுந்தனர். இதனை தொடர்ந்து விமலும் குளிர்பானத்தில் திராவகத்தை கலந்து குடித்தார்.
போலீசார் விசாரணை
இதனால் சிறிது நேரத்தில் துடிதுடித்த விமல் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அவர்கள் மூவரையும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.