கால்கள் செயலிழந்த 80 வயது தாய் - குப்பை மேட்டில் தனியாக விட்டுச் சென்ற மகன்!
கால்கள் செயலிழந்த தாயை, மகன் தனியாக தவிக்கவிட்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
80வயது தாய்
கன்னியாகுமரி, பாடுவான்விளை பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டில் குப்பை கூழங்களுக்கு இடையே 80வயது மூதாட்டி ஒருவர் படுத்த படுக்கையாக உயிருக்கு போராடியுள்ளார். இது குறித்து திங்கர்நகர் பேரூராட்சி தலைவர் சுமனுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
அவர் காங்கிரஸ் நிர்வாகியான லாரன்ஸ் மற்றும் இளைஞர்களுடன் அங்கு சென்று மூதாட்டியை மீட்டு முதலுதவி செய்துள்ளனர். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து விசாரணை நடத்தியதில், மூதாட்டியின் பெயர் கித்தேரி அம்மாள் என்பதும், கணவரை இழந்தவர் என்பதும் தெரியவந்தது.
அவலம்
அவரது ஒரே மகனான செல்வாராஜ் என்பவரை படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்துள்ளார். அவர் தற்போது, திய பங்களா வீட்டில் வசித்துவரும் நிலையில், பழைய வீட்டுப்பகுதியில் சிறிய அறையில் தாய் வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக தெருவில் கிடக்கும் பேப்பர் மற்றும் பழைய பொருள்களை சேகரித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாய் மூலம் சாப்பிட்டு வந்திருக்கிறார். இந்நிலையில், கால்கள் செயலிழந்த நிலையில், வீட்டில் முடங்கியுள்ளார். வீட்டின் அருகே உள்ளவர்கள் சாப்பாடு கொடுத்து பார்த்து வந்துள்ளனர்.
இதுகுறித்து அவரது மகன், வீட்டில் சில பிரச்னைகள் நடந்ததாகவும், தாய் தனியாக வேலை செய்து வந்ததால், அவரை விட்டுவிட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். தாயை பார்க்கும் கடமை மகனுக்கு உண்டு, மூதாட்டியை கவனிக்கும்படி அறிவுறுத்தி போலீஸார் அனுப்பி வைத்தனர்.