தனது தோலால் ஆன செருப்பை தாய்க்கு அணிவித்த மகன் - பாவங்களை போக்க வினோத பரிகாரம்!
பாவங்களை தீர்க்க மகன் ஒருவர் பரிகாரமாய் தனது தோலால் செய்த காலனியை தாய்க்கு அணிவித்துள்ளார்.
தோலால் செய்த செருப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியை சேர்ந்தவர் ரோனக் குர்ஜார். ஒரு காலத்தில் பிரபல ரவுடியாக இருந்த இவர் தொடர்ந்து கொலை முயற்சி, கொள்ளை, அடிதடி போன்றவையில் ஈடுப்பட்டு பலரின் பாவங்களுக்கு ஆளானார்.
பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட இந்த நபர் அதற்கு ஒரு நாளும் வருந்தியது இல்லை. ஒரு நாள் காவல்துறை நடவடிக்கையில், துப்பாக்கியால் சுடப்பட்ட ரோனக் படுத்தபடுக்கையானபோது தனது தவறுகளை மெல்ல உணரத் தொடங்கினார்.
பாவங்களை போக்க பரிகாரம்
குறிப்பாக ராமாயணத்தை நாள்தோறும் பாராயணம் செய்ததில் படிப்படியாக மனம் திருந்தினாராம். ராமரின் தீவிர பக்தரான அவர் தான் செய்த தவறுகளில் இருந்து பிராயசித்தம் தேட முடிவு செய்தார்.
அப்போது ராமாயணத்தில், "ஒரு மகன் தன் தோலில் காலணி தயாரித்து தாய்க்கு அணிவித்தால் கூட போதாது" என்று ராமர் கூறியதை ரோனக் பின்பற்ற விரும்பியுள்ளார்.
இதை தொடர்ந்து ரோனக், தனது குடும்பத்திற்கு தெரியாமல் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து தொடையில் ஒரு பகுதியளவு தோலை உரித்து, அதனை காலணி தயாரிப்பவரிடம் தந்து தன் தாய்க்கு உரிய காலணி தயாரித்தார்.
மேலும், அவர் வசிக்கும் அந்த பகுதியில் நடைபெற்று வந்த பகவத் கீதை உரை நிகழ்ச்சியை ஒட்டி, ரோனக் தனது தாய்க்கு பாதபூஜை செய்வித்து அந்த தோலால் ஆன காலணியை அணிவித்து வணங்கினார்.
இந்த நெகிழும் சம்பவத்தை கண்டு பக்தர்கள் அனைவரும் கண்ணீர் உகுத்தனர்.