அப்பா திருடிய தங்க நகை.. போலீசிடம் பிடித்து கொடுத்த மகன் - அடுத்து நடந்த சம்பவம்!
தங்க சங்கிலியை திருடிய அப்பாவை மகனே போலீசிடம் போட்டு கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தங்க நகை..
திருச்சி மாவட்டம், குண்டூரைச் சேர்ந்தவர் வசந்தா (80). இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடந்த வாரம் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் தாம்பரம் பேருந்து நிலையம் செல்வதற்காக பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவில் தாம்பரம் செல்வதற்காக ஏறியுள்ளார். தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென குரோம்பேட்டை பச்சமலை நோக்கி சென்றுள்ளது. இதை அறிந்த வசந்தா ஏன் வேறு எங்கோ கூட்டி செல்கிறீர்கள் என ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது ஆட்டோ ஓட்டுனர் பச்சமலை அருகே சென்றபோது வசந்தா கழுத்தில் அணிந்து இருந்த 10 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
மகன்
இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா இது குறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தாம்பரம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான கணேசன் தன் குடும்பத்தாரிடம் ''தான் 10 சவரன் தங்க நகையை திருடி வந்ததாக தெரிவித்து,
அதனை அடகு வைத்து குடும்ப செலவுக்கு பார்த்துக் கொள்ளலாம்'' என கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணேசனின் மகன் ராமச்சந்திரன் தந்தை திருடி வந்த தங்க சங்கிலியோடு காவல் நிலையம் அழைத்து வந்து நடந்ததை கூறி போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இதை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தான் வீட்டு செலவுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். இதன் பிறகு அவரிடமிருந்து 10 சவரன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு
செய்து சிறையில் அடைத்தனர். தனது தந்தை குற்ற சம்பவத்தில் ஈடுப்பாடு இருந்தாலும், அதனை போலீசிடம் அழைத்து வந்து ஒப்படைத்த அவரது மகன் ராமச்சந்திரனை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் வெகுவாக பாராட்டினார்.