45 வயதான தாய்க்கு 2வது திருமணம் செய்துவைத்த மகன் - நெகிழ்ச்சி!
தாய்க்கு மீண்டும் மகன் திருமணம் செய்துவைத்த நிகழ்ச்சி நடந்துள்ளது.
கணவனை இழந்த தாய்
மகாராஷ்டிரா, கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ்(23). இவரின் தந்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் உயிர் இழந்துவிட்டார். பின், அவரின் தாய் ரத்னா தனி நபராக சம்பாதித்து தன் குடும்பத்தை காப்பாற்றினார். கணவர் இறந்த பிறகு உறவினர்கள் எந்தவித நல்ல காரியங்களுக்கும் ரத்னாவை அழைக்கவில்லை.
அழைத்தாலும் கணவன் இல்லாததால் ரத்னா விழாக்களில் கலந்து கொள்ளவில்லை. அப்படி விழக்களுக்கு போனால் இழிவாக நடத்தப்படுவோம் என்ற பயத்தில் இருந்துள்ளார். இது அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. அவரது சுமைகளையும் அன்பையும் பகிர்ந்துகொள்ள அவருக்கு ஒரு துணை தேவை என்பதை அவரது மகன் யுவராஜ் உணர்ந்துள்ளார்.
மறுமனம் செய்துவைத்த மகன்
இந்நிலையில், யுவராஜ் கூறியதாவது, என் அம்மாவை மறுமணம் செய்துகொள்ள சம்மதிக்க வைப்பது என்று முடிவு செய்தேன். என் அம்மாவை இதற்கு சம்மதிக்க வைக்க 3ஆண்டுகள் ஆனது. இதற்காக எனது சமுதாயம் மற்றும் உறவினர்களை சம்மதிக்க வைப்பது அதை விட கடினமாக இருந்தது. என் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் மூலம் என் அம்மாவுக்கு ஏற்ற துணையை தேடினேன்.
பின், அதிர்ஷ்டவசமாக மாருதி கணவத் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. என் அம்மாவிடமும், மாருதியிடமும் பேசி திருமணத்தை முடிவு செய்தோம். என் அம்மாவுக்கு ஏற்ற துணையை தேடி கண்டுபிடித்த அந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பான நாள் என்று தெரிவித்தார். இது தொடர்பாக மாருதி கணவத் கூறியதாவது, கடந்த சில ஆண்டுகளாக நான் தனியாகத்தான் வசித்து வருகிறேன்.
ரத்னாவை சந்தித்து பேசிய பிறகு, அவரின் குடும்பத்துடன் ஏன் சேர்ந்து வாழக்கூடாது என்று நினைத்தேன். ரத்னாவுக்கு மறுமணம் தொடர்பாக முடிவு எடுப்பது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. இறந்துபோன கணவரை மறக்க அவர் தயாராக இல்லை என்று தெரிவித்தார்.
பின் நீண்ட யோசனைக்கு பின் ரத்னா இதற்கு சம்மதித்துள்ளார். ரத்னா மற்றும் மாருதிக்கு உறவினர்கள் முன்னிலையில் மகனே திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.