மல்லிப்பூ போன்ற இட்லிக்கு...
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மிக ஆரோக்கியமான உணவில் இட்லிக்கு என்றுமே இடமுண்டு, ஆவியில் வேகவைத்து எடுப்பதால் எளிதில் செரிமானம் ஆகிறது.
ஆனால் பலருக்கும் பஞ்சு போன்ற இட்லி சுடுவதில் தான் பிரச்சனையே, இந்த பதிவில் மிக்ஸியில் மாவு ஆட்டியே பஞ்சு போன்ற இட்லி செய்வது எப்படி என தெரிந்து கொள்ளப்போகிறோம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 2 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் அரிசியை கழுவி விட்டு ஊறவைக்கவும், உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்றாக கழுவிவிட்டு ஊற வைக்கவும்.
உளுந்தை மட்டும் ஃப்ரிட்ஜில் ஊறவைக்கவும், இவை இரண்டும் குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் வரை நன்றாக ஊற வேண்டும்.
மாவு அரைக்கும் முன்னர் உளுந்து ஊறிய தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும், மிக்ஸியில் உளுந்தை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

மாவு கெட்டியாகும் போது, சிறிது சிறிதாக எடுத்து வைத்த உளுந்து தண்ணீர் ஊற்றி அரைக்கவும், உளுந்து பொங்கி வரும் போது தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்ததாக அரிசியை அரைக்கவும், அரிசி மாவை கொரகொரவென ரவை பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.
உளுந்து மாவுடன் அரிசி மாவை சேர்த்து கல் உப்பு போட்டு 5 நிமிடங்களுக்கு நன்றாக கலக்கி கொள்ளவும்.
பாத்திரத்தை மூடி வைத்து 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும், மறுநாள் காலையில் மாவு புளித்து உப்பி வந்திருக்கும், இந்த மாவை கொண்டு இட்லி சுட்டு எடுத்தால் மிருதுவான இட்லி தயார்!!
