அரசு கல்லூரி மெஸ் உணவில் இறந்த பாம்பு; மாணவர்கள் போராட்டம் - பரபரப்பு!
மெஸ் உணவில் இறந்த பாம்பு கிடந்ததால் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறந்த பாம்பு
பீகார் மாநிலம் பாங்காவில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தங்கும் விடுதியில் சமைக்கப்பட்ட உணவில் இறந்த பாம்பின் பாகங்கள் கிடந்துள்ளது. இந்த உணவை சாப்பிட 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும், கல்லூரி நிர்வாகம் மீது அடுக்கடுக்கான புகார்களை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
விசாரணை
இந்த விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுப்போனவை. இதனை சாப்பிடாமல் இருந்தாலோ, மெஸ் கட்டணம் செலுத்தாமல் இருந்தாலும் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், போலீசார் தரப்பில் போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.