சிவாஜி கணேசனின் 95 வது பிறந்த நாள் - முதலமைச்சர் மரியாதை!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சிவாஜி கணேசன் பிறந்த நாள்
சிவாஜி கணேசன் பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகி 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 2 இந்தி படங்கள், 9 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
“நடிகர் திலகம்”, “நடிப்புச் சக்கரவர்த்தி” என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டார். இவர் நடித்த கப்பலோட்டியத் தமிழன், இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் காண்போரின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறது.
முதலமைச்சர் மரியாதை
இவருக்கு பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது மற்றும் தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இன்று நடிகர் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.பி.சாமிநாதன், சேகர் பாபு, துரை முருகன், கே.என்.நேரு, மா.சுப்ரமணியன், எ.வ.வேலு, ரகுபதி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.