திருடச்சென்ற வீட்டில் டிஆர் பாட்டு கேட்டபடி சொகுசு தூக்கம் - சிக்கிய அரைநிர்வாண திருடன்
திருடச்சென்ற இடத்தில் மது அருந்தி போதையில் தூங்கிய திருடனை போலீஸார் மடக்கி பிடித்துள்ளனர்.
தூங்கிய திருடன்
சிவகங்கை, நடுவிக்கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டியன். காரைக்காலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சொந்த ஊரான நடுவிக்கோட்டைக்கு விடுமுறை நாட்களில் செல்வது வழக்கம். அதற்காக வீட்டில் சமைப்பதற்காக பாத்திரங்கள், குத்துவிளக்கு மற்றும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் மட்டும் வைத்திருந்தார்.
இந்நிலையில், வீட்டிலிருந்து சத்தம் வந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்ததில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உரிமையாளர் பாண்டியனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். போலீஸார் வந்து பார்த்ததில் வீட்டில் இருந்த கட்டிலில் மது போதையில் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
மடக்கிய போலீஸ்
அதனையடுத்த விசாரணையில், ராமநாதபுரம், மேலச்சேந்தனேந்தல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் சுதந்திரதிருநாதன்(27) . இரவில் பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்ட ஓட்டை பிரித்து இறங்கி வீட்டிற்குள் இருந்த பாத்திரங்கள், குத்துவிளக்கு, மின்விசிறி, வெண்கல பொருட்கள் அனைத்தையும் சாக்குபையில் கட்டி வைத்துள்ளார்.
பின்னர் மது அருந்தியதால் போதையில் காதில் ஹெட்போனில் TR.ராஜேந்தர் காதல் பாடல்களை கேட்டபடி தூங்கியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.