சென்னையில் ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்களை குறிவைத்து சங்கிலி பறித்த திருடன்
வேளச்சேரி பகுதியில் வீட்டின் ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்களை குறி வைத்து தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி பகுதிகளில் உள்ள வீடுகளில் ஜன்னலோரம் காற்றுக்காக படுத்திருந்த பெண்களின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக வேளச்சேரி போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் திருடனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் பெண்களிடம் சங்கிலி பறித்து தப்பிச்சென்ற திருடன் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படையினர் ஆந்திரா சென்று அங்குள்ள நகரி பகுதியை சேர்ந்த திருலோகசந்தர் என்பவரை கைது செய்து விசாரித்தனர். அதில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பகலில் வந்து நள்ளிரவில் ஜன்னல் ஓரம் தூங்குவோரை நோட்டமிட்டு கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு ஆந்திராவில் உள்ள அடகு கடையில் விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
இவர் மீது ஆதம்பாக்கம், பள்ளிகரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து திருட்டு நகைகளை வாங்கியதாக நகரியில் உள்ள அடகு கடை உரிமையாளர் உகமாராம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவரிடம் 15 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.