பிரபல பாடகி கல்பனாவுக்கு என்ன நடந்தது? தற்கொலை முயற்சியால் மருத்துவமனையில் அனுமதி!
பாடகி கல்பனா தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடகி கல்பனா
பிரபல பின்னணி பாடகி கல்பனா, ஐதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த குடியிருப்பு வாசிகள் அவரின் வீட்டு கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனே, சம்பவ இடம் விரைந்த போலீஸார் கதவை உடைத்து பார்த்ததில், கல்பனா சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார்.
தற்கொலை முயற்சி
பின் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததில், அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தது தெரியவந்துள்ளது. தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்ட கல்பனா வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், தற்கொலை முயற்சிக்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சம்பவத்தன்று கல்பனாவின் கணவர் சென்னையில் இருந்துள்ளார். தகவலறிந்ததும், ஹைதராபாத் சென்று பார்த்துள்ளார்.
சக பாடகி சுனிதா மற்றும் நெருக்கமான பலரும் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர். பாடகி கல்பனா 1000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சேனல்களில் ஒளிபரப்பான மியூசிக் ரியாலிட்டி ஷோகளில் நடுவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.