பாஜக, காங்கிரஸ் ஜெயிக்க முடியாத சிக்கிம் - யார் இந்த பிரேம் சிங் தமாங்
சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் 31 இடங்களில் முன்னிலையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
சிக்கிம் தேர்தல் 32 தொகுதிகளை உடைய சிக்கிம் மாநில சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவானது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் ஆளும் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 தொகுதிகளில் முன்னிலை வகித்து 2ம் முறையாக ஆட்சியை கைப்பற்றுகிறது. இங்கு தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் களத்தில் இருந்தாலும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி நிலவுகிறது.
சிக்கிமில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 146 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், அவர் மனைவி கிருஷ்ண குமாரி ராய், முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங், முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவார்.
சிக்கிம் ஜனநாயக முன்னணி
சிக்கிம் மாநில அரசியலில் சிக்கிம் ஜனநாயக முன்னணி முக்கிய கட்சியாகும். சிக்கிம் மாநிலத்தில் 1994 முதல் 2019 வரை 25 வருடங்களாக இக்கட்சியே ஆட்சியில் இருந்தது. இக்கட்சி சார்பில் பவன் குமார் சாம்லிங் முதல்வராக இருந்தார். 25 வருட ஆட்சியை அகற்றி ஆட்சியை கைப்பற்றியது சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா. அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் முதல்வரானார்.
பிரேம் சிங் தமாங் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் முக்கிய தலைவராக இருந்தவர். கடந்த 2013 ம் ஆண்டு கட்சியிலிருந்து விலகி சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியை தொடங்கினார்.
பிரேம் சிங் தமாங்
2014ல் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்தித்த பிரேம் சிங் தமாங்கின் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி மொத்தமுள்ள 32ல் 10 இடங்களில் வென்று 40.8% வாக்குகளை பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. 2019 சட்டமன்ற தேர்தலில் 19 இடங்களில் வென்று முதல்முறையாக ஆட்சியை பிடித்தது.
தேர்தலுக்கு பின் பாஜக கூட்டணியில் இணைந்த இவர் 2024 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தனித்து போட்டியிட்டு 31 இடங்களில் முன்னிலையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது. மீதமுள்ள ஒரு தொகுதியில் சிக்கிம் ஜனநாயக முன்னணி முன்னிலை வகிக்கிறது.
சிக்கிம் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளை வெல்ல விடாமல் தமிழ்நாட்டை போல மாநில கட்சிகளே ஆதிக்கம் செய்கின்றன.