கோவை தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது - சர்கார் படப்பாணியில் கிளப்பிய ஆஸ்திரேலியா டாக்டர்
தமிழகத்தில் நடைபெற்றுள்ள மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
மக்களவை தேர்தல்
நாட்டின் பல கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகின்றது. முதற்கட்டமாக தமிழகம் உட்பட 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக கடந்த 26-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
இன்னும் தேர்தல் வரும் ஜுன் -1 ஆம் தேதி நடக்கும் வரை நடைபெறும் நிலையில், தமிழகத்தில் கோவை மற்றும் சென்னை மக்களவை பாஜக வேட்பாளர்கள் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மீது வைத்தனர். 1 லட்சம் வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளதாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.
அதனை தொடர்ந்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த சூழலில் தான், கோவை தேர்தல் முடிவுகள் வெளியிடக்கூடாது என மனு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணியாற்றி வருகிறேன். தேர்தலில் வாக்களிக்க கோவை வந்தபோது எனது மற்றும் மனைவியின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை.
முடிவு அறிவிக்க கூடாது
கடந்த 2019 மற்றும் 2021 தேர்தலில்களில் நாங்கள் வாக்களித்த நிலையில் தற்போது எங்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. எங்கள் பெயர்கள் நீக்கப்பட்டாலும் அதே முகவரியில் எங்களின் மகள் பெயர் பட்டியலில் உள்ளது. எங்களை போலவே அப்பகுதியில் பலரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் இ-மெயிலில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பெயர் நீக்கப்பட்டவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை லோக்சபா தேர்தல் முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்.