இளைஞரை ஓட ஓட வெட்டிய கும்பல்.. பதறவைக்கும் CCTV காட்சிகள் - நடந்தது என்ன?
வாலிபர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று அறிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
சென்னை ஐயப்பன் தாங்கலில் வசித்து வருபவர் தமிழ். இவர் மீது ஐயப்பன் தாங்கல் காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவருக்கும் காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சபரி என்ற ரவுடிக்கும் கஞ்சா விற்பனை செய்வதில் முன் விரோதம் இருந்துள்ளது.இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் காவல் துறை தரப்பில் எச்சரித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு தமிழ் தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த சபரி தனது கூட்டாளி 5 பேருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது தனியே நின்றிருந்த தமிழ் மீது அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தமிழ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மேலும் அந்த கும்பல் சம்பவ இடத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளது.
கொடூர சம்பவம்
அப்போது சாலையில் நின்றிருந்த கார்கள், பைக்குகள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை உடைத்துச் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் ரத்த வெள்ளத்திலிருந்த தமிழை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஐயப்பன் தாங்கல், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது.