எனக்கு ஒட்டு போடாவிட்டால் 2 நாள் சாப்பிடாதீர்கள் - பள்ளி குழந்தைகளிடம் MLA சர்ச்சை பேச்சு!
எம்.எல்.ஏ ஒருவர் பள்ளிக்குழந்தைகளிடம் வாக்களிப்பது தொடர்பாக பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் .
சர்ச்சை பேச்சு
தேர்தல் பிரச்சாரத்தில் எந்த விதத்திலும் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என்று கடந்த வாரம்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அப்படி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் எம்.எல்.ஏ ஒருவர் "உங்கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்கவில்லையெனில், இரண்டு நாட்களுக்கு சாப்பிட வேண்டாம்" என்று பள்ளிக்கு குழந்தைகளிடம் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான சந்தோஷ் பாங்கர் என்பவர், ஹிங்கோலி மாவட்டத்திலுள்ள பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சந்தோஷ் பாங்கர் "உங்களது பெற்றோரிடம் அடுத்த தேர்தலில் எம்.எல்.ஏ சந்தோஷிற்கு வாக்களிக்கும்படி கூறுங்கள்.
அவர்கள் வாக்களிக்கவில்லையெனில், இரண்டு நாட்களுக்கு சாப்பிடாதீர்கள். உங்களது பெற்றோர் ஏன் சாப்பிடவில்லையென்று கேட்பார்கள். உடனே எம்.எல்.ஏ சந்தோஷிற்கு வாக்களியுங்கள் சாப்பிடுகிறோம் என்று சொல்லுங்கள்'' என்று கூறினார்.
இந்த பேச்சை கேட்டதும் நிழச்சியில் கலந்து கொண்டிருந்த ஆசிரியர்களும், ஊழியர்களும் சிரித்துக்கொண்டுதான் இருந்தனர். இந்நிலையில் இதுபோன்று பேசிய எம்.எல்.ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.