அது மட்டும் நடந்தால் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும் – ஜாம்பவான் எச்சரிக்கை
முன்னாள் வீரர் ஒருவர் பும்ராவின் காயம் பற்றி தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.
பும்ரா காயம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா. காயம் காரணமாக இவரால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து ஐபிஎல் தொடர் இன்னும் பத்து நாட்களில் தொடங்கவுள்ளது.
அதில், முதல் இரண்டு வாரத்தில் நடைபெறும் போட்டியில் பும்ரா பங்கேற்கமாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஷான் பாண்ட் கருத்து
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷான் பாண்ட், “அவர் ஸ்கேனுக்கு சென்ற போதே அவருக்கு முதுகுப் பகுதியில் பிரச்சனை இருக்கும் என்று நினைத்தேன். இப்போது அவர் குணமாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் அவருக்கு மீண்டும் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டால் அத்துடன் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும். ஏனென்றால் ஒரே இடத்தில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்தால் அதில் இருந்து மீண்டு வருவது கடினம். அதனால் பிசிசிஐ பும்ராவை சரியாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.