செக்யூரிட்டி To சர்வதேச கிரிக்கெட் வீரர் - ஷமர் ஜோசப்பின் வாழ்க்கையை மாற்றிய தமிழர்!
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் எப்படி கிரிக்கெட் வீரராக மாறினார் என்பது குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
ஷமர் ஜோசப்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டியை வென்றிருக்கிறது.
இந்த தொடரில் அதிரடியாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.
இதனால் தற்போது அவரின் பெயர் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது. ஷமர் ஜோசப் செக்யூரிட்டி பணியில் இருந்துதான் பின்னர் கிரிக்கெட்டராக மாறியுள்ளார். ஆனால் அவர் எப்படி கிரிக்கெட் வீரராக மாறினார் என்பது குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
அதுவும் அதற்கு காரணமே ஒரு தமிழர் தானாம். கரீபியன் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் ஷமர் ஜோசப் வலை பயிற்சி பவுலராக இருந்துள்ளார்.
அப்போது அவர் வீசிய ஒரு பந்தை பார்த்து அசந்துபோன தமிழக கிரிக்கெட் வல்லுனர் பிரசன்னா, உடனே ஷமர் ஜோசப்பை அழைத்து யார் என்று விசாரித்துள்ளார். '
உதவிய தமிழர்
அப்போது, தான் ஒரு வணிக வளாகத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறேன் என்றும் தினமும் இங்கு ஒரு மணி நேரம் பந்து வீசினால் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால் வந்தேன் என்றும் கூறியுள்ளார்.
உடனே, சரி நான் சொல்வது போல் ஒரு 5 பந்து வீசி காட்டு என்று பிரசன்னா கூற, ஜோசப்பும் வீசியுள்ளார். அவர் வீசிய பந்துகள் பாகிஸ்தான் வீரர் அஸம் கானை கதிகலங்க செய்துள்ளது.
இதை பார்த்ததும் உடனே கயானா அமேசான் வாரியர்ஸ் அணி கேப்டன் இம்ரான் தாஹிரை அழைத்து, என் மீது நம்பிக்கை இருந்தால் நாளை பிளேயிங் லெவனில் இந்த பையன் விளையாட வேண்டும் என்று பிரசன்னா கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர்கள் அணியின் உரிமையாளரை தொடர்பு கொண்டு ஜோசப்புக்கு கயானா அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தை வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.
தமிழர் பிரசன்னாவால் இன்று ஷமர் ஜோசப் என்ற உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ளார்.