சொன்னதை செய்த கம்மின்ஸ்..! இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!
சொந்த மண்ணிலேயே இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.
உலகக்கோப்பை
இந்தியாவில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 முடிவடைந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்த போட்டியானது குஜராத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் இந்திய அணி சரமாரியாக திணறியது. இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்கள், கே.எல்.ராகுல் 66 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
ஆஸ்திரேலியா வெற்றி
இதில் டேவிட் வார்னர் 7 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் மார்னஸ் லபுசேனுடன், டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார்.
சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் இந்திய பவுலர்களை துவம்சம் செய்தார். அவர் 120 பந்துகளில் 137 ரன்கள் விளாசினார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6 வது முறையாக உலகக்கோப்பையை வென்றது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் "இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கான ஆதரவாளர்கள் அதிக அளவில் இருப்பார்கள் என எனக்கு தெரியும்.
மைதானத்தில் இருக்கும் 1,30,000 பார்வையாளர்களும், இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். நாளைய இறுதிப்போட்டியில் இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு என்று கூறியிருந்தார். அதேபோல் போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய ரசிகர்களை, ஆஸ்திரேலிய அணி தங்களது சிறப்பான ஆட்டத்தால் அமைதியாகவே இருக்க செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.