கத்தாரிலிருந்து 8 இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை - ஷாருக்கான் தான் காரணமா..?
முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு நடிகர் ஷாருக்கானின் மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடற்படை வீரர்கள் விடுதலை
கத்தாரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 8 இந்திய கடற்படை முன்னாள் வீரர்களை உளவாளிகள் என சந்தேகித்து கத்தார் அரசு கைது செய்தது. பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, அவர்கள் விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்பினர். இந்நிலையில் 8 இந்திய கடற்படை வீரர்களின் விடுதலைக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் காரணம் என முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு இந்தியக் கடற்படை வீரர்களை விடுவிக்க, நடிகர் ஷாருக் கான் உதவினார்.
கத்தாரின் அரசு அதிகாரிகளிடம் வெளியுறவுத் துறை அமைச்சரகம் பேசியதில் உடன்பாடு எட்டப்படாததால், பிரதமர் மோடி, சினிமா நட்சத்திரமான ஷாருக் கானின் உதவியை நாடினார்.
ஷாருக்கான் காரணமா..?
அதனால்தான் கடற்படை அதிகாரிகளை விடுவிக்க கத்தார் அரசு முன்வந்தது" என குறிப்பிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி வெளியிட்டுள்ள அறிக்கையில் "கத்தாரிலிருந்து இந்தியக் கடற்படை அதிகாரிகளை விடுவிப்பதில் ஷாருக் கானின் தலையீடு இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அத்தகைய கூற்றுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. இந்திய அரசின் அதிகாரிகளும் சந்தேகத்திற்கிடமின்றி இதை மறுக்கிறார்கள். இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் விடுவிப்பு விவகாரத்தின் அனைத்து விஷயங்களும் மிகவும் திறமையான தலைவர்களால் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன.
பல இந்தியர்களைப் போலவே ஷாருக் கானும் முன்னாள் கடற்படை அதிகாரிகள், வீட்டில் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.