மகள் வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கணவன், மாமனார், மாமியார் உடந்தை - கொடூரம்!
பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் மற்றும் உடந்தையாக இருந்த இளம்பெண்ணின் கணவன் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் தொல்லை
திருவண்ணாமலை மாவட்டம், கரியமங்கலம் ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் செல்வி. இவரின் கணவன் சீனுவாசன் (வயது 55) பா.ஜ.க-வில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளராக இருந்தவர்.
சீனுவாசனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பேயாலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம் என்பவர் தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் தங்கி வேலை செய்துவந்தார். இவர்களுடன் ராமஜெயத்தின் பெற்றோரும் தங்கியிருந்து தோட்ட வேலைகளைச் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ராமஜெயத்தின் மனைவிக்கு (22) சீனுவாசன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
போலீசார் நடவடிக்கை
இதுகுறித்து தனது கணவன் மற்றும் மாமனார், மாமியாரிடம் அந்த இளம்பெண் சொல்லியுள்ளார். ஆனால் ராமஜெயம் "சீனுவாசன் நிலத்தின் உரிமையாளர். அவரின் ஆசைக்கு அனுசரித்துப் போவதில் தவறில்லை’ என்று கூறினார்களாம்.
மேலும், சீனுவாசன் அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சீனுவாசன் மற்றும் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த இளம்பெண்ணின் கணவன் ராமஜெயம், மாமனார் பெருமாள், மாமியார் பச்சையம்மாள் ஆகியோரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.