குடிநீரால் 3 பேர் பலி? கதறும் மக்கள் - அரசியல் தலைவர்கள் கண்டனம்
குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
குடிநீரில் கழிவுநீர்?
திருச்சி உறையூரில் வாந்தி, வயிற்றுப் போக்கு காரணமாக பிரியங்கா(4) என்ற சிறுமி மற்றும் 2 பெண்கள் என 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மேலும், 17 பேர் அரசு மருத்துவமனையிலும், 10-க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் குடிநீரில் கழிவுநீர் கலந்ததுதான் எனக்கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை.
அப்பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிட்டதால் உணவு ஒவ்வாமை காரணமாகவே மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், 4 வயது சிறுமிக்கு பாரம்பரிய முறையில் வயிற்றில் தொக்கு நீக்குதல் செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகவும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
3 பேர் பலி
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 9 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. புதை சாக்கடை அடைப்பை நீக்குவது, குளோரின் பவுடர் தெளிப்பது போன்ற பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் 15 நாட்களாக குடிநீரில் பிரச்சினை இருப்பதாக மக்கள் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்களுக்கு அத்தியாவசியமான குடிநீரைக் கூட சுகாதாரமாக அளிக்க முடியாத நிலையில் அரசு உள்ளது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதேபோல் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.