இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்ட கணவர்? திருமணமான 40 நாட்களில் பரபர புகார்
இருட்டுக்கடையை வரதட்சணையாக கணவர் வீட்டார் கேட்கின்றனர் என்று புதுமணப் பெண் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
இருட்டுக்கடை விவகாரம்
நெல்லை டவுனில் ‘இருட்டுக்கடை’ பிரபலம். இந்த கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்பதியின் மகள் ஸ்ரீகனிஷ்கா. இவருக்கும், கோவையை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாகவும், கணவர், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும், இருட்டுக்கடை உரிமையை வரதட்சணையாக கேட்பதாகவும்,
கமிஷனர் அலுவலகத்தில் கனிஷ்கா தனது தந்தை ஹரிசிங், தாயுடன் வந்து புகார் மனு அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிஷ்கா, எனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்தார்.
வரதட்சணை புகார்
இதனால் நான் மனவேதனை அடைந்து பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டேன். மறுநாள் இரவு எனது கணவரும், அவரது குடும்பத்தார்களும் திருநெல்வேலிக்கு வந்து எனது தாயிடம், உன் மகள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால் கூடுதலாக வரதட்சணை வேண்டும்.
திருநெல்வேலியில் இயங்கிக் கொண்டிருக்கும் இருட்டுக்கடை உரிமையை எனது பெயருக்கு எழுதி தர வேண்டும் என்று மிரட்டினார்கள் என்றார். ஆனால் பல்ராம் சிங்கின் தந்தை யுவராஜா, “அதிக சொத்துள்ள நாங்கள் ஏன் வரதட்சணை கேட்கப் போகிறோம்.
இருட்டுக்கடையை நாங்கள் கேட்பதாக கூறுவது ஆதாரமற்றது. கார் கேட்டதாக கூறப்படுவதும் தவறான தகவல். எங்கள் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் பொய்யான புகார்களைக் கூறுகின்றனர். அவர்களது புகாரை சட்டப்படி எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.