சூனியம் வைத்ததாக சந்தேகம் - முதியவரை உயிரோடு கொளுத்திய கிராம மக்கள்
சூனியம் வைத்ததாக குற்றச்சாட்டி முதியவர் மீது கிராம மக்கள் தீ வைத்துள்ளனர்.
சூனியம் செய்ததாக குற்றச்சாட்டு
ஒடிஷா மாநிலம், நுவாபாடா மாவட்டத்தில் உள்ள போர்திபாடா கிராமத்தில் வசித்து வருபவர் கம் சிங் மஜ்ஜி(50). நேற்று மாலை அங்கு வசிக்கும் மக்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்.
அந்த கூட்டத்துக்கு வயதான கம் சிங் மஜ்ஜியும் வரவழைக்கப்பட்டுள்ளார். அந்த கூட்டத்தில் அவர், சூனியம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
உயிரோடு தீ வைப்பு
இதற்கு தண்டனையாக கம் சிங் மஜ்ஜியை வைக்கோலால் செய்யப்பட்ட கயிறுகளால் கட்டி தீ வைத்தனர். வலியால் அலறி துடித்த மஜ்ஜி ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு ஓடினார். அவரை யாரும் காப்பாற்ற முன்வராத நிலையில், அருகில் இருந்த குளத்தில் குதித்தார்.
குளத்தில் இருந்து அவரை காப்பாற்றிய அவரது குடும்பத்தினர், சிகிச்சைக்காக சினாப்பிளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணை
"கிராம மக்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டி, என் தந்தையை சூனியம் செய்ததாக குற்றம்சாட்டி மிரட்டினர். அவர் குற்றச்சாட்டை மறுத்ததால், முதலில் அவரை அடித்து, பின்னர் தீ வைத்தனர்" என்று மஜ்ஜியின் மகன் ஹேம் லால் கூறினார்.
இது குறித்து சினாபல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். விசாரணைக்காக காவல்துறையினர் கிராமத்திற்குள் சென்றதுமே பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு தப்பி ஓடி விட்டனர்.