SC ST பிரிவிற்கு தனித்தனியாக அமைச்சகங்கள் - நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய திருமாவளவன்
திருமாவளவன்
2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் உரையாற்றினார்.
இதில் அவர் பேசியதாவது, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்ந்த மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கின்றன. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள 3 கட்சிகளின் ஆதரவை தொடர்ந்து பெற்று, NDA ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே மத்திய பட்ஜெட் உள்ளது. இதனால்தான் மத்திய பட்ஜெட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். அதன் காரணமாகத்தான் அவர் நிதி ஆயோக் கூட்டத்தையும் புறக்கணிப்பதாக கூறினார்.
புதிய அமைச்சகம்
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவமரியாதை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காததால் ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின் கீழ் நிதியை வழங்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. உயர்கல்விக்கு இந்த முறை ரூ.10000 கோடி அளவிற்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஐஐடி நிறுவனத்திற்கு ரூ.60 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
பிரிவு 368ன் கீழ், இயற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் பெயர்கள் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் 3 குற்றவியல் சட்டங்கள் இந்தியில் கொண்டுவரப்பட்டுள்ளது ஏன்? இந்த பெயர் மாற்றம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை என கூறினார்.
மேலும், நாடு முழுவதும் எஸ்சி, எஸ்டி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்கென தனிச் சட்டத்தை உருவாக்க வேண்டும். பட்டியல், பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் இருப்பது போல தனித்தனி புதிய அமைச்சகங்களை உருவாக்க வேண்டும். மேலும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினருக்காகவும் தனி அமைச்சகங்களை உருவாக்க வேண்டும். என பேசியுள்ளார்.