இந்தியாவின் சக்கர வியூகத்தை கட்டுப்படுத்தும் 6 பேர் - ராகுல் காந்தி பேச்சு
பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி
2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரை ஆற்றினார்.
இதில் பேசிய அவர், ஜிஎஸ்டி என்கிற வரி பயங்கரவாதத்தை மத்திய அரசு ஏவிவிட்டுள்ளது. ஜிஎஸ்டி என்பது வரிவிதிப்பு தீவிரவாதம். ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு தொழில்கள் நசுக்கப்பட்டுவிட்டன. மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு, விவசாயிகளுக்கு என எந்த ஒரு அறிவிப்புமே இல்லை. அக்னிபாத் திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஓய்வூதியம் வழங்கப்படுவது இல்லை.
நீட் வினாத்தாள்
நாடு முழுவதும் வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இதுகுறித்து பட்ஜெட்டில் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா? கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பட்ஜெட்டில் எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை. பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக கொண்டுவரப்பட்ட இன் டர்ன்ஷிப் திட்டத்தால் பெரு நிறுவனங்கள் பயன்பெறும். வேலையில்லா திண்டாட்டத்திற்கு இன் டர்ன் ஷிப் திட்டம் ஒரு பேண்ட் எய்ட் போன்றது. மோடி அரசு என்பது வேலைவாய்ப்பின்மை மற்றும் வினாத்தாள் கசிவின் அர்த்தமாக மாறிவிட்டது.
சக்கர வியூகம்
மேலும், மகாபாரதத்தில் 6 பேர் சக்கர வியூகத்தில் அபிமன்யுவை சிக்க வைத்து கொன்றனர். 21 ஆம் நூற்றாண்டில், ஒரு புதிய 'சக்கரவியூகம்' உருவாகி இருக்கிறது. அதுவும் தாமரை வடிவில் உள்ளது. அந்த சின்னத்தை பிரதமர் மார்பில் அணிந்துள்ளார். அபிமன்யுவுக்கு என்ன நடந்ததோ, அதேதான் இந்தியாவுக்கும் நடக்கிறது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சிக்கியுள்ளனர்.
தற்போது நரேந்திர மோடி, அமித்ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி என 6 பேரின் சக்கரவியூகத்தில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ளது. இந்த சக்கரவியூகத்தால் மாநில அரசுகள் ஒடுக்கப்படுகின்றன. பாஜகவின் இந்த சக்கர வியூகத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். இந்த சக்கரவியூகத்தை நிச்சயம் நாங்கள் தகர்த்து எறிவோம் என பேசினார்.
ராகுல் காந்தி பேசும் போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம்பிர்லா அம்பானி , அதானி, அஜித் தோவல் சபை குறிப்பில் இடம்பெறாது என கூறினார். இதனால் அம்பானி, அதானி பெயரை A1, A2 என ராகுல் காந்தி குறிப்பிட்டார். இதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.