மத்திய பட்ஜெட் 2024; AA க்கு மட்டுமே பலன் தரும் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய பட்ஜெட்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது.
“Kursi Bachao” Budget.
— Rahul Gandhi (@RahulGandhi) July 23, 2024
- Appease Allies: Hollow promises to them at the cost of other states.
- Appease Cronies: Benefits to AA with no relief for the common Indian.
- Copy and Paste: Congress manifesto and previous budgets.
சாமானிய இந்தியர்கள் எவ்வித பலனும் இல்லாத வகையில், ஏஏ-வுக்கு (AA - அம்பானி, அதானி) பலன் தரும் விதமாக உள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகளை நகலெடுத்து ஒட்டியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவிற்கு ரூ. 15,000 கோடியும், பீகாருக்கு ரூ. 26,000 கோடியும் சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் நிவாரண நிதி, சாலை மேம்பாடு என பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களும் இரு மாநிலங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.