அப்போதே ஆக்ஷன் எடுத்த செந்தில் பாலாஜி - இப்போ பெரிய சேதம் தவிர்ப்பு
கடந்த 2021ஆம் ஆண்டு பெய்த கனமழையின்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டதற்கான காரணங்களை ஆய்வு செய்தார். மழைநீர் தேங்கியதால், சேதமடைந்த பில்லர் பாக்ஸ்கள் கண்டறியப்பட்டன.

பெரும்பாலான இடங்களில் பில்லர் பாக்ஸ்கள் தாழ்வாகவே இருந்தன. இதையடுத்து, உடனடியாக, தாழ்வாக இருந்த பில்லர் பாக்ஸ் அனைத்தும் ஒரு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டன. இப்படியாக, சென்னையில், 4,658 பில்லர் பாக்ஸ், தரையில் இருந்து 1 மீட்டர் உயர்த்தப்பட்டன.
240 துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும், 1,877 மின் வழித்தடங்கள் வாயிலாக, 41,311 டிரான்ஸ்பார்மர்கள் உதவியுடன் மின் வினநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் தேங்கும் இடங்களில் இருக்கும் துணைமின் நிலையங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்களின் உயரமும் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு சென்னை மழையில், 2 நாட்களாக வெளுத்து வாங்கிய மழையில், சென்னை நகரமே மழைநீரில் மிதந்த நிலையிலும், மின்சார டிரான்ஸ்பார்கள், பில்லர் பாக்ஸ்களுக்கு அதிகம் சேதம் ஏற்படவில்லை.

மழை நின்ற அடுத்த 2 மணி நேரத்தில் மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். அதன்படியே, புயல் சென்னையை விட்டு விலகிய நிலையில் சென்னையில் மழை குறைந்ததும், நள்ளிரவில் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மின் விநியோகம் வழங்கப்பட்டது.
தற்போதைய நிலையில் சென்னையில் சுமார் 80% இடங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு விட்டது. மழை நீர் வடியாத இடங்களில் மட்டுமே மின்சார விநியோகம் தாமதப்படும் மற்ற இடங்களில் வெகு விரைவில் மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.