திருப்பரங்குன்றம்; அப்படியே நடந்துட்டே.. தமிழக அரசு பரபரப்பு வாதம்
நீதிபதி சுவாமிநாதன் அதிகார வரம்பை மீறி செயல்பட்டது துரதிஷ்டவசமானது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்ற விவகாரம்
திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி, மலை உச்சியில் அதற்கான ஏற்பாடுகளை செய்த கோயில் நிர்வாகம் திடீரென ரத்து செய்தது. இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா, தென்னிந்தியா பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாலை 6 மணியளவில் வழக்கமான முறைப்படி, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத நிலையில்,
மனுதாரர் மற்றும் 10 பேர் உடன் சென்று தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உடன் சி.ஐ.எஸ்.எப். படையினர் பாதுகாப்புக்காகச் செல்ல வேண்டும் என்றும் தனி நீதிபதி அதிரடி உத்தரவிட்டார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் 16 கால் மண்டபம் அருகே கோஷமிட்டனர்.
அரசு தரப்பு வாதம்
தடுப்புகளை மீறி அவர்கள் மலையேற முயன்றதால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின் அசாதாரண சூழல் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டார். தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து இந்து அமைப்பினர், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லக்கூடிய பாதையிலேயே சூடம் ஏற்றி தரையில் விழுந்து வழிபட்டு விட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய
தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் முறையிட்டார். இந்த வழக்கு வாதத்தில் அரசு தரப்பினர், நீதிமன்ற அமைப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடையாது.
தர்கா நிர்வாகம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. அதைக் கேட்காமல் நீதிமன்ற அமைப்பு நடவடிக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர் . நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்த அன்றே, தண்டனை வழங்க இயலாது. இதனை சட்டமும் உறுதி செய்கிறது.
இந்த உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டு அவர்கள் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.