அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி சகோதரர் - விரைவில் கைதா?
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணைக்கு ஆஜராகாத அசோக்குமார்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் மற்றும் நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அடுத்தடுத்து சோதனை நடத்திய நிலையில், கடந்த வாரம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி அசோக்குமாருக்கு அமலாகத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இதனிடையே இன்று அசோக்குமார் நேரில் ஆஜராகவில்லை, அமலாக்கத்துறை கேட்ட ஆவணங்களை திரட்டி வருவதால் தன்னால் ஆஜராக முடியவில்லை என அமலாக்கத்துறைக்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.