அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடக்கவேயில்லை - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு தகவல்..!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடக்கவேயில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி
அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய நிலையில் அவரை கைது செய்து அழைத்துச் சென்ற போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி அவரை சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு இதயத்தில் 4 அடைப்புகள் இருப்பதை அடுத்து அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி அங்கு அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தனர். அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தேறியது. தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். அமலாக்கத்துறையினரின் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடக்கவில்லை
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், அரசு மருத்துவமனையில் இருந்த செந்தில் பாலாஜி அமைச்சர் நேருவுக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பது அரசு மருத்துவமனையின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்புகிறது.
அப்படி என்றால் அரசு மருத்துவமனை தரமில்லை என்று இந்த அரசு ஒப்புக் கொள்கிறதா? அமைச்சர் என்றால் ஒரு நிலைப்பாடு பொதுமக்கள் என்றால் ஒரு நிலைப்பாடா?
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடக்கவேயில்லை என்று பலரும் கூறுகின்றனர்.
இதை அமலாக்கத்துறை விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.