செந்தில் பாலாஜி வழக்கு - அமலாக்கத்துறையை எச்சரித்த உச்ச நீதிமன்றம்
செந்தில் பாலாஜி வழக்கு இன்றே இறுதி நாள் என உச்சநீதி மன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜி
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து உச்சநீதி மன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
வழக்கு ஒத்திவைப்பு
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு ஒரு வழக்கில் ஆஜராகியிருந்ததால், செந்தில் பாலாஜி வழக்கில் அவர் ஆஜராக முடியாது எனவே வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டுமென அமலாக்கத்துறை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த 3 வழக்குகளையும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரிக்கப்போகிறதா? அல்லது 1000-க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்ட வழக்கை தவிர்த்துவிட்டு செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை மட்டும் விசாரிக்கப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆஜராகி, நீதிபதி எழுப்பிய கேள்விக்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகஸ்ட் 20 ஆம் தேதி விளக்கம் அளிப்பார் என்று தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வரத் தாமதமாகும் எனக்கூறி வழக்கை இன்றைய நாள் இறுதியில் தள்ளிவைக்கக் கோரி அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது. இன்று இறுதி நாள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
அமலாக்கத்துறை கைது செய்துள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும், போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கிய வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனவே செந்தில் பாலாஜி விடுதலையாவதில் சிக்கல் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.