அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் - நாளை விசாரணை!
அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு , புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சைக்கு பின்னர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவக் காரணங்களுக்காக ஜாமின் வழங்கக் கோரி அவரது தரப்பில் 2 முறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் புழல் சிறையிலேயே இருந்து வருகிறார்.
ஜாமின் மனு
செந்தில் பாலாஜிக்கு நேற்று காலை 6 மணியளவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு திரும்பினார்.
இந்நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் இன்று மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் முன், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அதற்கு நீதிபதி, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.