மூத்த தலைவர்கள்..இளைஞர்களுக்கு வழி விடுங்க- மீண்டும் சர்ச்சையான துரைமுருகன் பேச்சு!
திமுகவில் இளைஞர்களுக்கு சீனியர்கள் வழிவிட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.
துரைமுருகன்
வேலூரில் நடந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “நிறைய இளைஞர்கள் திமுக நோக்கி வருகிறார்கள்.
அவர்கள்தான் திமுகவின் பலம். நான் திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இணைந்தபோது இளைஞனாகதான் வந்தேன். அன்றே அண்ணா சொன்னார். நாற்றங்காலில் இருக்கும் பயிரை எடுத்து சேற்றில் நட்டால்தான் வளரும்.
வழி விடுங்கள்..
அதனால் உங்களை கட்சியில் தகுந்த நேரத்தில் சேர்த்து நான் மாற்றுகிறேன் என்று அண்ணா சொன்னார். அதனால் இளைஞர்களுக்கு வழி விடுங்கள். அவர்கள் இல்லையென்றால் திமுக கொஞ்ச நாட்களில் பின் தங்கிவிடும். நமக்கு கொள்கைதான் முக்கியம் கொள்கை பிடிப்புடன் இருங்கள்.
அதுபோல உள்ளே வரும் இளைஞர்கள் தடம் பார்த்து வாருங்கள். என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்து வராதீர்கள். உங்களை விட அதிகம் உழைத்தவர்கள் உங்களுக்கு முன்னால் இருக்கிறார்கள்” முன்னதாக திமுக கூட்டம் ஒன்றில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சரும்,
திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக சீனியர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்றும், அவர்களை வழிநடத்த வேண்டும் என்றும் திமுகவில் இளைஞர்களை முக்கிய பதவிகளுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.