எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லாதது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்
துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
செங்கோட்டையன்
அத்திகடவு - அவிநாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில், முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
விழாவை புறக்கணிக்கவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மேடையில் இல்லாததாலே கலந்து கொள்ளவில்லை என செங்கோட்டையன் விளக்கமளித்திருந்தார்.
ஆர்.பி.உதயகுமார் வீடியோ
இதனை தொடர்ந்து எம்.ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய செங்கோட்டையன், "இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டுமென நினைப்பவன் நான். என்னைச் சோதிக்காதீர்கள்" என பேசியிருந்தார்.
இதையடுத்து எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் மறுவடிவம்தான் எடப்பாடி பழனிசாமி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டார். இது செங்கோட்டையனுக்கு பதிலடியாக வெளியான வீடியோ என சமூகவலைத்தளத்தில் விவாதம் எழுந்த நிலையில், யாருக்கும் பதில் அளிப்பதற்காக வீடியோ வெளியிடவில்லை என உதயகுமார் விளக்கமளித்தார்.
எடப்பாடி பழனிசாமி பெயர்
தொடர்ந்து நேற்று(13.02.2025) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “இந்தமுறை தேர்தலில் நாம் தோல்வியடைய துரோகிகள்தான் காரணம் . அவர்களை அடையாளம் காட்ட வேண்டும்” என செங்கோட்டையன் பேசி இருந்தார். தனது பேச்சில் ஒருமுறை கூட எடப்பாடி பழனிசாமி பெயரை உச்சரிக்கவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்கள் இது குறித்து செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பிய போது, "துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். அந்தியூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு துரோகம் தான் காரணம் எனச் சொன்னேன். கூட்டத்தில் பேசும் போது, பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் என அழுத்தமாக சொல்லி இருக்கிறேன்” என கூறினார்.