ஒன்றாக இருக்க வேண்டுமென நினைப்பவன் நான்; என்னை சோதிக்காதீர்கள் - செங்கோட்டையன் பேச்சு
எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும் நான் மயங்கவில்லை என செங்கோட்டையன் பேசியுள்ளார்.
செங்கோட்டையன்
அத்திகடவு - அவிநாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில், முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மேடையில் இல்லாததாலே விழாவை புறக்கணித்ததாக செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற டெல்லி அதிமுக அலுவலக திறப்பு விழாவிலும் கலந்து கொள்ளவில்லை.
சிக்க வைக்க முடியாது
இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற எம்.ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
இதில் பேசிய அவர், என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எத்தனை ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் எத்தனையோ தலைவர்களை சந்தித்து விட்டு இன்றும் களத்தில் நிற்கிறேன். அதனால் ஏதாவது கிடைக்குமா என செய்தியாளர்கள் தேடி கொண்டிருக்கையில், எதுவுமே கிடைக்காது என்பதுதான் நான் சொல்லும் பதில்.
நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்த பாதை. அது நமக்கு காட்டியிருக்கும் வழி தெய்வங்களின் வழி. அவர்கள் இல்லை என்றால் இன்றைக்கு இந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருக்க முடியாது.
சோதிக்காதீர்கள்
நான் விழாவை புறக்கணிக்கவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. ஜெயலலிதா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான்.
தன்னலம் கருதாமல் செயல்படக்கூடியவன் நான். இயக்கம் ஒன்றே பெரிதென நினைப்பவன். எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும் நான் மயங்கவில்லை. இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டுமென நினைப்பவன் நான். நான் தெளிவாக இருக்கிறேன். என்னைச் சோதிக்காதீர்கள். அதுதான் நான் விடுக்கும் வேண்டுகோள்.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு தெளிவான சிந்தனையோடு இருக்கிறேன். சிலர் மாற்று முகாமில் இருந்து கருத்து சொல்கிறார்கள். அவர்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் தொண்டனாக இருக்க விரும்புகிறேன்" என பேசினார்.