ஜெயலலிதா படம் இல்லாததால் புறக்கணித்த செங்கோட்டையன் - ஜெயக்குமார் விளக்கம்
விழா மேடையில் ஜெயலலிதா படம் இடம் பெறாததற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா
ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக அத்திக்கடவு – அவிநாசி திட்டம் சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
அத்திகடவு - அவிநாசி திட்டத்திற்கு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று(09.02.2025) கோவை அன்னூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு பாராட்டு விழா நடத்தியது.
செங்கோட்டையன் எதிர்ப்பு
முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையனுக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் இந்த விழாவை புறக்கணித்திருந்தார். இது தொடர்பாக விளக்கமளித்திருந்த அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மேடையில் இல்லாததாலே விழாவை புறக்கணித்ததாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை இன்று(10.02.2025) காணொளி மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் செங்கோட்டையன் இந்த விழாவையும் புறக்கணித்துள்ளார்.
ஜெயக்குமார் விளக்கம்
இது விவசாய சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வு. பாராட்டு விழா நடத்திய கூட்டமைப்பில் அனைத்துக் கட்சி விவசாயிகளும் உள்ளனர். இதில் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்ற காரணத்தால் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை அவர்கள் வைக்கவில்லை. விழாவை அதிமுக நடத்தி இருந்தால் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெற்றிருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் தராமல் ஓரங்கட்டி வருகிறார். இதுவே செங்கோட்டையனின் புறக்கணிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும், தென் சென்னை கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, கட்சி நிகழ்வுகளின் பேனரில் என் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்த பயப்படுகிறார்கள் என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகளே உள்ள நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.