7 முறை தற்கொலைக்கு முயன்றேன்; உள்ளே ஒரு குரல் கேட்கும் - செல்வராகவன்
7 முறை தற்கொலைக்கு முயன்றதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன்
புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கியுள்ள செல்வராகவன் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர். இவர் நடிகர் தனுசின் அண்ணன் ஆவார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் கடந்த காலத்தில் தற்கொலைக்கு முயன்றது குறித்து பேசியுள்ளார்.
தற்கொலை முயற்சி
இதில் பேசிய அவர், "உலகம் முழுவதும் பார்த்தாலும் வாழ்க்கையில் இந்த இரண்டையும் அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது. ஒன்று தற்கொலை முயற்சி, இன்னொன்று டிப்ரஷன். நான் 7 முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளேன், ஆனால் இப்பொழுது அல்ல, சில வருடங்களுக்கு முன்பு.
ஒவ்வொரு முறையும், தற்கொலைக்கு முயலும் போது, உள்ளே ஒரு குரல் கேட்கும். ஏதோ சொல்ற மாதிரி, ஏதோ கேக்குற மாதிரி இருப்பதை உணர்வேன். கடவுள் ஏதோ சொல்கிறார் என நினைத்து விட்டுவிடுவேன். அதன் பிறகு, 10 நாள் கழித்து, அல்லது ஆறு மாதம், ஒரு வருடம் கழித்து கூட வாழ்க்கை திடீரென மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் மாறும்.
கடவுளின் குரல்
அப்போது, தற்கொலை செய்து கொண்டிருந்தால் எல்லாமே போயிருக்குமே என்று நான் நினைப்பேன். வாழ்க்கையே அதுதான். தற்கொலை செய்ய முயற்சிப்பவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்றால், அடுத்த ஜென்மத்திலாவது நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் எனும் நம்பிக்கையே.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு குடியிருப்பில் சந்தோஷமாக பிறந்து வாழ வேண்டும் என்று நினைப்போம்; ஆனால், கூவத்தில் பிறந்த பன்னியாகவோ, காட்டில் மரத்தில் தொங்கும் பேயாகவும் இருந்தால் யார் என்ன செய்வது?
நமக்கு கேட்கும் அந்த குரல் கடவுளின் குரலாகவோ அல்லது வேறு யாரின் குரலாகவோ இருக்கலாம். என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள், ஆனால் அந்த குரல் கேட்காமல் இருக்காது. இது உண்மையானது" என்று பேசியுள்ளார்.
தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.