தமிழின விரோதி அண்ணாமலை..அதை பேச அவருக்கு அருகதை இல்லை - செல்வப்பெருந்தகை!
நீதியரசர் சந்துரு குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை என செல்வப்பெருந்தகை சாடியுள்ளார்.
அண்ணாமலை
அண்ணாமலை நீதிபதி சந்துரு அவர்களை, குறித்து விஷமத்தனமான ஒரு கருத்தை வெளியிட்டுருந்தார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீதிபதி சந்துரு மீது அண்ணாமலைக்கு கோபம் வருவதற்கான காரணங்களை அனைவரும் அறிவார்கள். நீதியரசர் சந்துரு அவர்களை பொறுத்தவரை தமது 17-வது வயதில் மாணவ பருவத்திலேயே 1968 ஆம் ஆண்டில் கீழ்வெண்மணியில் 44 தாழ்த்தப்பட்ட மக்கள் தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட போது,
அதற்காக நீதி கேட்டு குரல் கொடுத்து போராடியவர். 1976 இல் வழக்கறிஞராக தொழிலை தொடங்கும் போதே தொழிலாளர் நலன், உரிமை சார்ந்த வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டவர். மக்களின் உரிமைகளை பறிக்கிற வழக்குகளில் தொழில் ரீதியான எந்த கட்டணத்தையும் பெறாமல் நீதிமன்றத்தில் வாதாடிய பெருமை அவருக்கு உண்டு.
செல்வப்பெருந்தகை
பொதுநல வழக்குகள், மனித உரிமை வழக்குகள், பெண்ணுரிமைக்கான வழக்குகள் என அனைத்திலும் சமூக உணர்வோடு பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடியவர்.இந்திய மக்களுக்காக அனைவரையும் உள்ளடக்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்தை தயாரித்து வழங்கிய சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கொள்கைகளை,
நீதியரசராக மிகுந்த துணிவுடன் நடைமுறைப்படுத்தியவர். அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட அம்சங்களை பாதுகாக்கிற ஒரு போராளியாக வாழ்ந்தவர்.அத்தகைய வரலாற்றுப் பெருமைகளை பெற்றிருக்கிற நீதியரசர் சந்துரு அவர்களை பாசிச போக்கு கொண்ட அண்ணாமலை விமர்சனம் செய்வதற்கு எந்த அருகதையும் இல்லை.
கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்து, நான் கன்னட மக்களுக்காகத் தான் பேசுவேனே தவிர, நான் சார்ந்த தமிழர்களுக்காக பேச மாட்டேன் என பகிரங்கமாக மேடையில் பேசிய தமிழின விரோதி தான் அண்ணாமலை.
தமிழின விரோதி
தமிழக பா.ஜ.க. கட்சியில் சேர்ந்தவுடனேயே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி கண்டவர் பதவி உயர்வு பெற்று மாநில தலைவரானது தமிழக பா.ஜ.க.வின் சாபக் கேடாகும். நீதிபதி சந்துரு வழங்கிய அறிக்கை குறித்து விவாதிப்பதில் தவறில்லை.
ஆனால், அறிக்கை வழங்கிய நீதிபதி சந்துருவுக்கு உள்நோக்கம் கற்பிப்பித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை அண்ணாமலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். சந்துரு அவர்கள் நீதியரசராக இருந்து வழங்கிய தீர்ப்புகளின் கருத்துகளின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட
‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” என்ற புத்தகத்தை தபால் மூலமாக அனுப்புகிறேன். அந்நூலை அண்ணாமலை படித்து நீதிபதி அவர்களை பற்றி முழுமையாக புரிந்து கொண்டு கருத்துகளை கூற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.